×

சோனாலி போகட் கொலை சிபிஐ விசாரணைக்கு ஒன்றிய அரசு உத்தரவு

பனாஜி: அரியானாவை சேர்ந்த பாஜ பிரமுகரான சோனாலி போகட்(43) கடந்த மாதம் கோவாவில் உள்ள ஒரு ஓட்டலில் உயிரிழந்தார். சோனாலியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் முறையிட்டனர். இதை தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் சோனாலி கடைசியாக பங்கேற்ற விருந்தில் அருந்திய பானத்தில் விஷம் கலந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவரின் உதவியாளர்கள் சுதீர் சங்க்வான், சுக்விந்தர் சிங் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் ஓட்டல் உரிமையாளர் உட்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் நேற்று கூறுகையில், ‘‘சோனாலி போகட்டின் கொலை வழக்கு விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுத உள்ளேன். போகட்டின் குடும்பத்தினர் வேண்டுகோளுக்கு இணங்க இந்த வழக்கு விவரங்களை சிபிஐயிடம் ஒப்படைத்துள்ளோம்’’ என்றார். இதைத் தொடர்ந்து, போகட் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க ஒன்றிய உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. சிபிஐ அதிகாரிகள் விரைவில் விசாரணையை தொடங்க உள்ளனர்.


Tags : Union Government ,CBI ,Sonali Bogat , Union government orders CBI probe into Sonali Phogat's murder
× RELATED சிபிஐ எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை:...